Friday, November 19, 2010

சிறை மட்டும் தான் தமிழனுக்கு மிச்சம் - நன்றி ஆனந்தவிகடன்

சீமானுக்கு முன்னால் எப்போதும் நான்கைந்து செல்போன்கள் கிடக்கும். 'என் தேசத்தில்


முளைத்த சூரியனே... பிரபாகரா', 'தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...' என்று அழைப்பு மணியோசை அடித்தபடியே இருக்க, "கொஞ்சம் தடத்தில் இருங்க தம்பி" என்று அடுத்தடுத்த செல்போன்களில் பேசியபடியே இருப்பார். இப்போது எதுவும் இல்லை. வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார். 'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்' என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமானை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதேபோன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். சீமான் மட்டும் இன்றி, கொளத்தூர் மணி,

நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறிது காலத்துக்குப் பிறகு, தே.பா சட்டம் பாய்ச்சப்பட்டது தவறு என மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும்கூட வழக்கு விசாரணைக்கு வந்தால், மிக எளிதாக சீமானை விடுவித்துவிட முடியும். ஆனால், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள். இதனால், சீமானின் வழக்கு விசாரணைக்கு வருவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களாக இதுதான் நடக்கிறது. நாங்கள் சீமானைச் சந்தித்தபோது, இதைப்பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்



'ராமேஸ்வரத்தில் தாக்கப்படும் மீனவத் தமிழனுக்காகத்தான் நான் பேசினேன். நான் பேசியதில் என்ன பிழை? இரண்டு நாட்களுக்கு முன்புகூட ராமேஸ்வரத்து மீனவர்களை நடுக் கடலில் வழி மறித்து, வலைகளை அறுத்து, பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி, அடித்துத் துரத்தி உள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரே ஒரு முறைகூட நமது மீனவர்களைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்தது இல்லை. அப்படியானால், நீங்கள் பாதுகாப்புப் பணி செய்யப் போனீர்களா? இல்லை, பல்லாங்குழி ஆடப்போனீர்களா? இதைப் பேசினால் இறையாண்மை கெட்டுவிடுமா?

இங்கு தமிழனுக்கு என்று எதுவும் இல்லை. நாங்கள் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறோம்.

உகாதிக்கு விடுமுறை விடுகிறோம். எங்களுடைய தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளன்று, ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் விடுமுறை விடுவது இல்லை? இதைக் கேட்பது தமிழ்த் தீவிரவாதமா? எவன் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறானோ, அவன் எல்லாம் இந்திய தேசியத்துக்கு உண்மையானவன், இந்தியாவை மதிப்பவன். எவன் எல்லாம் தமிழைப் போற்றுகிறானோ, அவன் எல்லாம் தமிழ்த் தீவிரவாதியா? நான் காவிரி நதி நீரில் பங்கு கேட்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாம். அவன் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 'காவிரி நீரைத் தர மாட்டோம்' எனச் சொல்வது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவானதா? 'முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும்' எனச் சொல்வது

இறையாண்மைக்கு எதிரானதாம். ஆனால், 'முடியாது. இன்னொரு அணையைக் கட்டுவோம்' எனச் சொல்வது இறையாண்மைக்குப் பாதுகாப்பானதா? அப்படியானால், எப்போதுமே இறையாண்மை என்பதும், தேசியம் என்பதும் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது தானா?

ஆந்திராவை காங்கிரஸ் ஆள்கிறது. மகாராஷ்டிராவையும் காங்கிரஸ் ஆள்கி றது. உண்மையிலேயே இந்த நாட்டில் தேசியம் இருப்பது உண்மையானால், மகாராஷ் டிராவின் முதல்வரை ஆந்தி ராவுக்கும், ஆந்திராவின் முதல்வரை மகாராஷ்டிரா வுக்கும் மாற்றி ஆள வைக்க முடியுமா? ஒரே கட்சி... ஒரே தேசம். முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தேசம் அடிப்படை யில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருக் கிறது. எல்லா மொழி வாரித் தேசிய இனங்களையும் அந்தந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆண்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர!

அன்று திராவிடக் கட்சிகளை, தேசியக் கட்சியான காங்கிரஸ் எப்படி வளரவிடாமல் அடக்கி ஒடுக்கியதோ, அப்படி இன்று தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் சேர்ந்து எங்களை நசுக்குகின்றன. தமிழன் ஒரு தனித்த தேசிய இனம், அவனுக்கு என்று ஓர் இறையாண்மை இருக்கிறது என்பதைத் தமிழனே இன்னும் உணரவில்லை. இவன் சாதிகளாகப் பிரிந்துகிடக்கிறான். சிறைச்சாலை மட்டும்தான் தமிழனுக்கு விதிக்கப்பட்ட இடமாக, வேறு யாராலும் பறிக்கப்படாத இடமாக மிஞ்சி இருக்கிறது!' என்று கோபம் வெடிக்கப் பேசிய சீமானைப் பார்க்கும்போது, அவர் இருக்கும் இடம்தான் சிறையே தவிர,

சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரிந்தது.அரசியல் கைதிகளுக்கான அறை சீமானுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். உள்ளுக்குள் இருக்கும் கைதிகளுடன் அரசியல் பேசுகிறார். சிறைக்குள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் அனைத்தும் வந்துவிடுவதால், அனைத்தையும் படித்துவிடுகிறார். எங்களிடம் இயக்குநர் தங்கர்பச்சான் குறித்து மிகுந்த கடுப்போடு பேசிய சீமான், 'தன்னுடைய சொந்த வேலையாக முதலமைச்சரைப் பார்த்து விட்டு, நான் ஏதோ விடுதலைக்குப் பிச்சை கேட்பதுபோன்ற தோற்றத்தை வெளியில் உண்டாக்கிவிட்டார்' என்று ரொம்பவும் கோபப்பட்டார்!" என்ற வழக்கறிஞர்களிடம், 'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நிலைப்பாடு என்ன? அதைப்பற்றி எதுவும் சொன்னாரா?' என்று கேட்டோம்.

"கேட்டோம். தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. பொது எதிரி காங்கிரஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்துவது மானமும், சுய மரியாதையும் உள்ள தமிழர்களின் கடமை என்ற சீமான், நாம் தமிழர் இயக்கத்தினரை இப்போது காங்கிரஸுக்கு எதிரான தேர்தல் வேலைகளுக்கு முடுக்கிவிட்டு இருக்கிறார்!" என்றார்கள்.

No comments:

Post a Comment