என் தமிழ் இன மக்களுக்கு நடந்த கொடுமைகளை பார்த்தும் பார்க்காதது போல்..... செல்லும் இந்த உலகமே.... கொஞ்சம் திரும்பி பார்........... என் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவி செய்.............
Friday, January 21, 2011
திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 11
மீண்டும் என் மீனவ சொந்தத்தின் மீது துப்பாக்கிப் பாய்ச்சி இருக்கிறது, திமிர்எடுத்த சிங்களக் கடற்படை! கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறியர்கள் தமிழக மீனவர்கள்மீது நடத்தும் வெறிகொண்ட தாக்குதல்கள், இந்த அரசாங்கத்தின் செவிகளை அறையவில்லை. இதுவரை 537 மீனவர்கள் சிங்களத் தாக்குதல்களால் செத்து மிதந்திருக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் நம் இந்திய அரசு சொல்கிறது, 'இலங்கை நம் நட்பு நாடு’ என்று! பகை நாடாகச் சொல்லப்படும் பாகிஸ்தான்கூட எல்லைமீறும் இந்திய மீனவர்களை இதுவரைத் தாக்கியது இல்லை!
கடற்பரப்பில் எல்லையை நிர்மாணிப்பது கடினம். தெரியாமல் எல்லை தாண்டும் மீனவர்களைக் கைது செய்வார்கள். எச்சரித்து அனுப்புவார்கள். கடற்பரப்பு கொண்ட அத்தனை நாடுகளும் அனுசரிக்கும் நியதி இதுதான். ஆனால், கோடானுகோடி பண உதவிகளையும் படை மரியாதைகளையும் ராணுவப் பயிற்சிகளையும் இந்திய அரசிடம் பெற்றுக்கொள்ளும் நட்பு நாடு என்கிற நாமகரணம் கொண்ட இலங்கை அரசு, தமிழக மீனவர்களைக் குருவியைப் போன்று சுட்டு வீழ்த்துகிறது! நடுக்கடலில் நம் தமிழ் மீனவர்கள் சிங்கள மீனவர்களால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறார்கள் என்பது தெரியுமா? உறவுகளே... திருக்கை மீனோடு மனிதனை உறவுக்கு உட்படுத்தும் கொடூரங்களை இதுவரை உலகம் கேள்விப்பட்டு இருக்கிறதா தமிழர்களே? அப்பனை விட்டு மகனை நிர்வாணமாக்குவது, சூடு போடுவது, பச்சை மீன்களை வாயில் திணிப்பது, ஒவ்வாத உறவுகளுக்கு உட்படுத்துவது... இப்படிச் சிங்கள வெறியர்களால் நடுக்கடலில் நம் உறவுகளுக்கு நிகழும் உபத்திரவங்கள் ஒன்றா, இரண்டா?
இதில் எல்லாம் ஏற்படாத இனப்பகை, 'எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ எனச் சொன்னதில் ஏற்பட்டுவிட்டதா? என்னை முடக்க நினைப்பவர்கள், சிங்கள மூர்க்கர்களை அடக்கத் துணியாதது ஏன்? உலக வல்லமை படைத்த இந்தியக் கடற்படை திறமைகள் எல்லாம் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மட்டும் தடுமாறுவது ஏன்? எல்லை மீறும் சிங்கள மீனவனை என்றைக்காவது இந்தியக் கடற்படை சுட்டிருக்கிறதா? தமிழ் மீனவர்கள் தாக்கப்படும்போது, என்றைக்காவது குறுக்கே விழுந்து தடுத்திருக்கிறதா?
மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றபோது, எந்த நேரமும் போர் மூளும் என்கிற அளவுக்கு ஆக்ரோஷம் கொண்ட இந்திய அரசு, தவணை முறையில் தமிழர்கள் காவு வாங்கப்படும் துயரத்தை மட்டும் கண்டுகொள்வதில்லையே!
பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்வது எல்லை மீறிய பயங்கரவாதம் என்றால் சிங்களவன் செய்வதும் அத்தகைய அயோக்கியத்தனம்தானே! தனுஷ்கோடி வரை தமிழக மீனவர்களை விரட்டிவந்து வேட்டையாடும் சிங்களக் கடற்படையை வேடிக்கை பார்க்கத்தான் எங்கள் கடற்படை கடலில் நிற்கிறதா? இந்தியக் கடற்படைக் கப்பலில் பறக்கும் தேசியக் கொடிதானே எங்கள் மீனவன் படகிலும் பறக்கிறது. இந்தியக் கொடி கட்டிய படகு நொறுக்கப்படுவது இந்தியக் கடற்படைக்கு இழுக்கு இல்லையா?
சிங்கள மீனவர் ஒருவர், அவருடைய நண்பரைச் சந்திப்பதற்காக மதுரை சிறைக்கு வந்தார். முகச் சாயலை வைத்து சந்தேகத்தில் நம் காவல்துறை அவரை விசாரித்தது. அந்த சிங்கள மீனவரின் பதிலும் நடவடிக்கையும் சந்தேகத்தை மிகுதியாக்கவே ஒரு கட்டத்தில், சுட்டுக் கொன்றுவிட்டது நம் காவல்துறை. உடனடியாக அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்ற நம் அரசு, நம் சார்பாகவே அந்த மீனவரின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கியது.
60 வருடங்களாக தமிழக மீனவர்களைத் தொடர்ந்து துயரத்துக்கு உள்ளாக்கும் இலங்கை ராணுவம் என்றைக்காவது எங்களின் துயரத்துக்குப் பொறுப்பேற்று இருக்கிறதா? மீனவப் பாண்டியனை நாங்கள் சுடவில்லை என்று இப்போதும் மறுக்கிறது சிங்கள அரசு. நீங்கள் சுடவில்லை என்றால், எங்கள் மீனவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு மடிகிறார்களா? இல்லை, உங்களுக்குக் கூட்டுப் பயிற்சி கொடுக்கும் எங்கள் இந்திய ராணுவமே எங்களைக் கொத்திக் குதறுகிறதா? எங்கள் இனத்தாரும் உள்துறை அமைச்சர் பெருமானுமாகிய ஐயா ப.சிதம்பரம், 'தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதே இல்லை’ என்கிறாரே? இத்தனை மீனவர்களின் பிணங்களையும் பார்த்துவிட்டுப் பேசுகிற பேச்சா இது? உங்களின் உளவுக் கண்களுக்கு எங்கள் வீட்டு இழவு ஏனய்யா தெரியாமல் போய்விட்டது? 'கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தது, கொடுத்ததுதான்’ என எஸ்.எம். கிருஷ்ணா சொல்கிறாரே.... கர்நாடக மீனவன் ஒருவன் சிங்கள அட்டூழியத்தால் செத்து மிதந்திருந்தால், எஸ்.எம்.கிருஷ்ணாவால் இப்படிச் சொல்லி இருக்க முடியுமா? சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கிற நேரத்தில் இறந்ததாலோ என்னவோ எங்களின் முதல்வர், பாண்டியன் கொலைக்கு ரொம்பவே பதறிவிட்டார். அடுத்த கணமே 5 லட்சம் பண உதவி அறிவிப்பு வெளியானது. தமிழன் தலையில், இடி விழுந்தால்கூட தபால் மட்டுமே எழுதும் எங்கள் முதல்வரின் நடவடிக்கையில் இந்த முறை கொஞ்சம் முன்னேற்றம்! தபாலுக்கு பதிலாக பிரதமருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்.
ஆழ்ந்த அனுதாபமும் அவசரத் தந்தியும் கொடுத்திருக்கும் முதல்வர், அடுத்தகட்ட முயற்சிகளையும் முன்னெடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். தமிழர்களே, தைரியமாக இருங்கள். பறிபோன பாண்டியனின் உயிரை அவர் பத்திரமாக மீட்டுத் தந்துவிடுவார்!
கடல் அளவுக்குக் கண்ணீரோடு போராடும் நம் மீனவச் சொந்தங்களை நினைக்கும்போதெல்லாம் ஈழத்துக்கு போய்வந்த நினைவுகளே என்னுள் ஏக்கத்தோடு எழும்புகின்றன. ஈழத்துக்குப் போய்த் தங்கிவிட்டு நம் மண்ணுக்குத் திரும்பவும் புலித் தம்பிகளோடு படகில் புறப்பட்டேன். அப்போது தூரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் நின்றுகொண்டிருந்தன. ''அங்கே பார்த்தீர்களா, அண்ணா? நம் கட்டுப்பாட்டுப் பரப்பில் நம் தமிழகச் சொந்தங்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கிறார்கள்!'' எனக் கை காட்டிச் சொன்னார்கள். பக்கத்தில் போனபோது என் முகம் அறிந்து நம் மீனவர்கள் கையை அசைத்து ஆரவாரிக்க,
''இவர்களின் படகிலேயே உங்களை அனுப்பி வைத்துவிடலாம். அரை மணி நேரத்தில், நீங்கள் தமிழகம் போய்விடுவீர்கள். ஆனாலும் அண்ணன் திட்டுவார்!'' எனச் சொன்னார்கள் புலித் தம்பிகள். என் நெஞ்சம் எல்லாம் நிரம்பி வழிந்த நேரம் அது. தமிழக மீனவர்களுக்குப் புலிகளின் கடற்படை துணை நின்ற தருணங்களை நினைக்கிறபோதெல்லாம் சிங்களவனின் வெறியாட்டம் ரெட்டிப்பு வேதனையாய் என் நெஞ்சை அறுக்கிறது. தாய்த்தமிழ் உறவுகளாகத் தழுவிய அந்தச் சொந்தங்களைத்தான் பயங்கரவாதிகளாக நம் தேசம் பிரகடனப்படுத்தியது. பாசம் காட்டியவர்கள் பயங்கரவாதிகள்! படுகொலை செய்பவர்கள் பாசக்காரர்கள்! இந்தியாவின் அணுகுமுறை என்னே! என்னே!
வியன்னாவில், ஒரு சீக்கியனின் தலைமுடியை அறுத்தமைக்காக சீக்கிய இனமே மொத்தமாக தெருவில் இறங்கிப் போராடியது. ஆனால், இங்கே எங்கள் தலையையே அறுத்த பின்னும் ஒருவனுமே போராடவில்லை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டபோது, மொத்த தேசமும் பொங்கி வெடித்ததே! இந்திய மாணவனுக்கு கொடுக்கும் குரலை இந்திய மீனவனுக்கு கொடுக்க ஏனய்யா மறுக்கிறீர்கள்? எங்களின் மீனவன் கடலில் மிதக்கும்போது 'இந்திய மீனவனின் சடலம்’ என்கிற அடையாளத்தைக்கூட இந்த அரசாங்கம் கொடுப்பது இல்லை. தமிழக மீனவனை இந்திய தேசத்தில் இருந்து தள்ளிவைக்கும் சட்டத்தை என்றைக்கு அய்யா பிறப்பித்தீர்கள்?
இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எங்களின் முதல்வர் திருமகனார் 'மட்டற்ற மகிழ்ச்சியில் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்’ என அறிவித்து, தமிழர் தலைவனாக தன் கடமையைச் செவ்வனே செய்கிறார். கொலையான பாண்டியனின் செந்நீரிலும் அவர் குடும்பத்துக் கண்ணீரிலும் எங்கே அய்யா தேடுவது 'மட்டற்ற மகிழ்ச்சியை?’ இதற்காகத்தானடா 'தமிழா இன உணர்வு கொள்’ என்பதைத் தொண்டை வரள வலியுறுத்துகிறேன். 'கொல், கொல்’ எனக் குரூரம் காட்டுபவனை வெல்வதற்காகவாவது இன உணர்வு கொள்ளடா தமிழா!
இதைச் சொன்னாலும் மீண்டும் ஏவுவார்கள் சட்டத்தை. 'மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ என்றதற்காக என்னைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த அறிவாளிகளே... 'சட்டமீறல்’ என சந்திக்கு இழுத்தவர்களே... 'அத்துமீறல்’ என அலறிய அரசியல் நுண்ணறிவாளர்களே! நான் அடிப்பேன் என்றதில் குலைந்துபோன தேசியப் பாதுகாப்பு, சிங்களவன் அடித்ததில் குலையவில்லையா? என் பேச்சால் உருவான இனப்பகை சிங்களவனின் குண்டு வீச்சால் உருவாகவில்லையா?
அன்றைக்கு என் வார்த்தைகளை 'வரம்பு மீறல்’ என உரைத்த உத்தமர்களே! இப்போது சொல்லுங்கள்... நான் என்ன செய்ய?
திருப்பி அடிப்பேன் தொடரும்
பாகம் 10
பாகம் 9
பாகம் 8
பாகம் 7
பாகம் 6
பாகம் 5
பாகம் 4
பாகம் 3
பாகம் 2
பாகம் 1
Labels:
seeman,
seeman in jail,
seeman thotar,
திருப்பி அடிப்பேன்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//வியன்னாவில், ஒரு சீக்கியனின் தலைமுடியை அறுத்தமைக்காக சீக்கிய இனமே மொத்தமாக தெருவில் இறங்கிப் போராடியது. ஆனால், இங்கே எங்கள் தலையையே அறுத்த பின்னும் ஒருவனுமே போராடவில்லை.//
ம்ம்ம்:((
இன்னும் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுகாக பாடுபடும்........... ஒரு அரசியல் இயக்கம் வரும் வரை இந்த பிரசென்னை திராது...........
தமிழ், தமிழர்க்க என்று சொல்லும் சில்ல கட்சிகள் பணத்திற்காக செயல்படும் வரை............... இந்த தமிழகம் திருந்தாது................
காலம் கனியும் விதி என்றெல்லாம் எண்ணிக் கொண்டிராமல் எல்லோரும் ஒன்றிணைந்து இனத்தினைக் காப்போம். வாருங்கள்.
ஐயா ஆத்திரகரே.........
எல்லோரும் ஒன்றினைந்து போராட்ட வேண்டும் என்று சொல்லுரிங்க........ அன்னால் நமது மக்களுக்கு இன்னுமும் அந்த படிபின்னை வரவில்லை..... நமது தமிழ் நாடில் இருக்கும் 12 கோடி மக்களில் எத்தனை பேருக்கு இலங்கை விவகாரமும், தமிழக மீனவர்கள் படும் கஷ்டமும் தெரியும்???
சில ஆயிரம் தமிழர்கல்கு நன்றாகவும், சில பத்து ஆயிரம் தமிழர்க்கு மேலோட்டம் அகவும் தெரியும்........... மற்றவர்கள் சன் TV கலைகர் tv வில் ஜெயலலிதாவை திட்டுவதையும், ஜெயா tv வில் கருணாநிதி யை திட்டுவதையும் பார்த்து கொண்டு இது தான் உலகம் என்று இருக்கிறார்கள்........
முதலில் அவர்களுகு அந்த படிபிணனை உண்டகினால் தான் மக்கள் அதனை பேரையும் ஒன்று இணைந்து போரட்ட முடியும்..............
அது வரைக்கும் எல்லா தகவல்களயும் அவர்களிடம் கொன்று சேர்ப்பது தான்..... நமது கடமை.............
Post a Comment