Monday, January 31, 2011

ஈழத்துக்காகத் துடித்தவர்களே, இல்லத்துக்காக கண்ணீர் வடிப்பவர்களே நீங்கள் இந்த நேரத்தில் வாங்க வேண்டியது காசு அல்ல… காவு! - திருப்பி அடிப்பேன் 14

சிறகுவிரித்ததோ வானத்தில் ஏறியோர் சிட்டுக்குருவி பறக்குதே… அதுவிடுதலை.
உறவுகூடிச்சிற் றெறும்புகள் அணிவகுத்து
ஊருகின்றன வேயது விடுதலை.
இறைமையோடுநான் நானென இருந்திடும்
இருப்பு என்பதே விடுதலை எனப்படும்
வறுமை வந்துறும் போதுமின் னொருவனின்
வாசல்நின்றிடா வாழ்வதே விடுதலை!



- புதுவையாரின் கவிதை புலன்களை முறுக்குகிறது. வாழக் கதியற்ற ஏழைகளின் வறுமையையே வாழ்வாதாரமாகக் கொண்டு, தமிழக அரசியல் வாழ்ந்து வருகிறதே…



மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, சாதியப் பிரச்னைகள், குழந்தைகள் கடத்தல், கல்விக் குளறுபடிகள், தற்கொலைகள் என என்னதான் ஆயிரம் பிரச்னைகள் நிலவினாலும், ஆயிரம் ரூபாய் நோட்டின் மூலம் அனைத்தையும் மறக்கடித்துவிட முடியும் என நினைக்கிறது ஆளும் கட்சி. வாக்குக்குப் பணம் வாங்குவது தவறு என்பது தெரிந்தும், வாழ்க்கையை ஓட்ட வக்கற்ற நிலையால் கையேந்தும் நிலையில்தான் கடைக்கோடி தமிழனும் இருக்கின்றான். வறுமையை தமிழக அரசியல்வாதிகள் வாழவைக்கும் பின்னணி வாக்குகளை விலைக்கு வாங்குவதற்குத்தான்!

ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தால் பலன் அடைபவர்கள் ஒரு கோடியே 88 லட்சம் பேர், கூட்டுறவு கடன் தள்ளுபடியால் பலன் பெற்றவர்கள் 23 லட்சம் பேர், இலவச தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியவர்கள் ஒரு கோடியே 50 லட்சம் பேர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் நலம் பெற்றவர்கள் ஒரு கோடியே 34 லட்சம் பேர்… இன்னும் இன்னும் பல கணக்குகளைப் போட்டு மொத்தமாக பலன் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது ஆளும் தி.மு.க. அரசு. கவர்ச்சித் திட்டங்களாலேயே வாக்குகளைக் கவர முடியும் என்பதை உணர்த்துகின்ற கணக்கு இது. ‘இதை விதைத்தால் இதை அறுக்கலாம்’ என்கிற வணிக நோக்கம் மட்டுமே கொண்ட ஒரு வியாபாரியைப் போல் அரசியல்வாதிகள் இன்றைக்கு இயங்கத் தொடங்கிவிட்டார்கள்.

வயிற்றுக்கு மீன் வழங்க வேண்டியவர்கள் தொண்டை​யைக் குறிவைத்து புழுகோர்க்கப்பட்ட தூண்டிலை வீசுவது வாக்குகளை வளைக்க வேண்டும் என்பதால்தானே! அதற்காகவே, பணத்தை இறைக்கிறார்கள், கவர்ச்சித் திட்டங்களை குவிக்கிறார்கள், தேர்தல் நெருங்க நெருங்க தெருக்கள் தோறும் வலம் வருகிறார்கள். ‘இப்படி ஒரு இடம் இருக்கிறதா’ என்பதைக்கூட இத்தனைகாலம் அறியாமல் இருந்தவர்கள் குக்கிராமப் பகுதியிலும் குனிந்து நுழைகிறார்கள்.

பதவிப் பகட்டுகளில் மிதந்தவர்கள், திடீரென நம்மைத் திரும்பிப் பார்ப்பது ஏன்? கடன் கேட்டாலும் கொடுக்க மறுத்தவர்கள் வலிய வந்து கவர் போட்டு பணத்தை திணிப்பது ஏன்? அலுவலகம் தேடிப்போய் அலைந்து திரிந்தாலும் காண மறுத்தவர்கள் வீடு தேடி வந்து விசனம் விசாரிப்பது ஏன்? வாக்கு என்ற ஒற்றை வார்த்தையை வளைக்கத்தானே இத்தனை கூத்துகளும். பணத்துக்கு உரிமைகளை விற்கும் இந்த இனத்துக்கு என்றைக்கடா தம்பி விழிப்பு வரும்? பாலில் சத்தியம் வாங்கி, தலைப்பிள்ளை உச்சியில் அடித்து, சாமியின் சந்நிதியில் முன்னிறுத்தி பணத்தைக் கொடுத்து, வாக்குக்கு பேரம் பேசும் ஈனத்தனங்களை தமிழன் எப்படியடா தாங்கிக் கொள்கிறான்?

‘யப்பா சாமி உனக்கு ஏதப்பா இவ்வளவு பணம், நாத்து பறிச்சியா? சேத்துல உருண்டியா? எங்கிருந்தப்பா சேத்த இவ்வளவு பணத்த? தேடிவந்து பணம் கொடுக்க நீ என் பங்காளியா… அங்காளியா?’ எனக் கொடுக்க வந்தவர்களை உன் கொடுக்கால் கொட்டாதது ஏனடா தமிழா?

அவனிடம் கொடுத்த வாக்கைக் காப்பதாக சொல்லி உன்னிடம் உள்ள வாக்கை ஊனமாக்குவது தவறில்​லையா தமிழா? கவர்ச்சித் திட்டங்களால் உன்னை மட்டமாக்கியவர்கள் கடைசி நேரப் பணத்தால் உன் சினத்தையும் சிதைக்கிறார்களே… இந்த தேசத்தின் அழுக்கை பொடி பொடியாக்கத்தானடா உன் விரலில் மை வைக்கிறார்கள். ஒரு துளி மையால் மொத்தத்தையும் சுத்தமாக்கும் வாய்ப்பு எப்போதடா வாய்க்கும். பிரியாணி பொட்டலத்தால் உன் வாக்கை பிரிக்கப்பார்ப்பதும், மது புட்டியால் உன்னை மயக்கப் பார்ப்பதும் இன்னும் எத்தனைக் காலத்துக்கு தமிழா தொடரும்

சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான பேராவூரணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். இன்றைய போக்கின் சக்தியையும் நம் வாக்கின் சக்தியையும் உரக்கச் சொன்னேன். கட்டுக்கடங்காத கூட்டம் கொட்டக்கொட்ட கேட்டது. கூட்டம் முடிந்து திரும்புகையில் கிராமத்துச் சுவடு சுமந்த பெரியவர் ஒருவர் என் கைகளைப் பற்றிக்கொண்டு பேசினார்.

‘நீங்க பேசுறதைக் கேட்கிறப்ப ரத்தமே முறுக்கேறுது தம்பி. நீங்க சொல்ற மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு ஓட்டுப்போடுற கூட்டம்தான் நாங்க. ஆனா, இந்த தடவை நிச்சயம் பணம் வாங்க மாட்டோம். இருந்தாலும் நாங்க யாருக்குத் தம்பி ஓட்டுப் போடுறது?’ எனக் கேட்டார். பணம் வாங்கக் கூடாது என்று முடிவெடுத்ததே ஜனநாயகத்துக்கு கிடைத்த பாதி வெற்றிதான். ‘யார் வரவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாவிட்டாலும் யார் வரக்​கூடாது என்பதை நிச்சயமாக நீங்கள் புரிந்திருப்பீர்கள். அதுவே உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும்’ என்று சொன்னேன். அந்தக் கடலோரத் தமிழனிடம் ஏற்பட்ட விழிப்பும் முழிப்பும் கடைக்கோடித் தமிழனுக்கும் ஏற்படும் நாளில் நிச்சயம் இந்த தேசத்துக்கு நிம்மதி பிறக்கும்.

இதில் கொஞ்சமும் சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால், வாக்குப் போடுவதை தேவையற்ற வேலை என்று எண்ணி அதைப் புறக்கணிப்பது. வாங்கிக்கொண்டு வாக்கு போடுவது எவ்வளவு மோசமான காரியமோ, அதற்குச் சற்றும் குறையாததுதான், வாக்கு போடாமல் புறக்கணிப்பதும். புறக்கணிக்கவோ, பொழுதைக் கழிக்கவோ நீங்கள் தவறவிட்ட நல்ல வாக்கு எங்கோ ஒரு மூலையில் கள்ளவாக்காக பதிவாகிறதே, அதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? ஒரு தொகுதியில் வெறும் நாலு ஓட்டு மட்டுமே விழுந்தாலும் அதில் மூன்று ஓட்டு வாங்கியவனுக்கு வெற்றி என்று அறிவிப்பதுதான் நம் விசித்திர ஜனநாயகத்தின் வழக்கம். இலங்கையில், வெறும் எட்டு ஓட்டுகள் மட்டுமே வாங்கிய டக்ளஸ் தேவானந்தா அங்கு அமைச்சராக பொறுப்பேற்றது புறக்கணிப்பு காட்டும் மேதாவிகளுக்குப் புரியாதா?

வறுமை தீரவில்லை என்று சொல்லி பணம் வாங்குபவனுக்கும், பொறுமை இல்லை என்று சொல்லி புறக்கணிப்​பவனுக்கும் என்ன வித்தியாசம்?

இதற்கிடையில், இன்னும் சிலரோ தங்களின் புறக்கணிப்பை பதிவு செய்யும் விதமாக 49ஓ-வுக்கு வாக்களிக்கிறார்கள். அதனால் என்ன பயன் என்பது அந்த அறிவாளிகளுக்கே வெளிச்சம். ஓ போட்டால் எதிரிகள் நமக்கு ஓ போட்டுவிட மாட்டார்களா? ஒரு வாக்கால் ஒரு நாட்டின் போக்கையே மாற்ற முடியும் என்கிற உண்மை புரியாமல் வாக்காளன் இப்படி வாடிக் கிடக்கிறான் என்றால் தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் அதைவிடப் பரிதாபம்.

கண்ணுக்கு முன்னே காசுகள் வீசப்படுவது தெரிந்தும் கைகட்டப்பட்ட நிலையில்தான் அதிகாரிகள் அல்லாடுகிறார்கள். வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாலேயே அவர்களுக்கு ஆயிரம் விதமான சலுகைகளை வழங்கி ஆதாயம் தேடப்பார்க்கிறது ஆளும்கட்சி. மாற்று மாநில ஆசிரியர் பெருமக்களை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தினால் ஆளும்கட்சியின் ஆதாய நோக்கை நிச்சயமாக தடுக்க முடியும். உடனே, ‘மாற்று மாநிலத்தவர்களால் மொழி புரியாமல் எப்படி பணியாற்ற முடியும்?’ என்ற கேள்வி பாயக்கூடும். மாற்று மாநிலத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் நம் மாநில தேர்தல் ஆணையாளர்களாக பணியாற்றி இருக்கிறார்களே அடையாள அட்டை வைத்து பெயரையும் முகத்தையும் சரிபார்க்க மொழி அறிவு முக்கியமா என்ன?

தேர்தல் ஆணையம் பெரும் கவனம் எடுத்து பரிசீலிக்க வேண்டியது, அடையாள மை குறித்த ஆதங்கத்தைத்தான். அஞ்சு ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட பணம் கொடுத்ததற்கு சாட்சியாக ரசீது தருகிறார்கள். ஆனால், விலைமதிக்க முடியாத வாக்கை செலுத்தும் வாக்காளனுக்கு ஒரு துளி மைதான் ரசீதா? வாக்காளர் அடையாள அட்டை போலவே வாக்கை செலுத்தியதற்கு ஆதாயமாக ஒரு அட்டை வழங்கலாமே. மையை அழிக்கக்கூடிய வழிமுறைகளை எல்லாம் கள்ள ஓட்டுக்காரர்கள் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா என்ன?

முறைகேடுகளை தவிர்க்க வேண்டிய தேர்தல் ஆணையம் முடங்கிக் கிடப்பதால்தானே தேர்தல் என்றாலே நமக்கு திருமங்கலம் நினைவு வருகிறது. ‘நம் எம்.எல்.ஏ. ஜெயிச்சு நல்லது செய்வாரு’ என நம்பிய காலம் போய், ‘நம் எம்.எல்.ஏ. மண்டைய போட்டார்னா தேவலாம்’ என எதிர்பார்க்கிற காலம் உருவாகியது எதனால்? அள்ளி இறைக்கிற கூத்துகளை அதிகாரிகள் தடுக்காததால்!

தேர்தலுக்கு மிகக்குறுகிய காலமே இருக்கிறது தமிழா, உன் கையில் இருக்கிற வாக்கு மிகப்பெரிய கருவி.

வாக்காளப் பெருங்குடி மக்களே என வாய் பூரிக்க சொன்னபடி குனிந்த தலையும், கும்பிட்ட கைகளுமாய் உன் வீடு தேடி வருவார்கள். விலை பேசுவார்கள், ஆதரிப்பீர்… வாக்களிப்பீர் என வாக்கு கேட்கும் வார்த்தைகளில் கூட பீர் விற்பார்கள். ஈழத்துக்காகத் துடித்தவர்களே, இல்லத்துக்காக கண்ணீர் வடிப்பவர்களே நீங்கள் இந்த நேரத்தில் வாங்க வேண்டியது காசு அல்ல… காவு!

2 comments:

ஆனந்தி.. said...

//முறைகேடுகளை தவிர்க்க வேண்டிய தேர்தல் ஆணையம் முடங்கிக் கிடப்பதால்தானே தேர்தல் என்றாலே நமக்கு திருமங்கலம் நினைவு வருகிறது. //

எங்க ஊருக்கு பக்கம் தானே சகோ திருமங்கலம்...சத்தியமாய் இதை மறக்கவே முடியாது...பெரிய ஊழல் புரட்சி அரங்கேறிய அற்புத காலம் அது...:))

உங்களுள் ஒருவன் said...

வீடு தேடி ஒட்டு கேட்க எவன் வந்தாலும்.......... எந்த கட்சி வந்தாலும்.......... மரியாதையை கிடையாது...........
49 க்கு வோட்டு போட மக்களிடம் பரப்புவோம்.............

Post a Comment