Friday, March 11, 2011

தி மோட்டர் சைக்கிள் டைரீஸ் (The Motor cycle Diaries)


சே என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம்..போராட்ட குணமுள்ள மனிதர்களின் அடையாளம். சே எனும் அற்புத போராளியின் புகழ் அவர் வாழ்ந்த நிலங்களை தாண்டி உலகின் திசையெங்கும் அறியப்பட்ட காரணம் அந்த மகத்தான் மனிதரின் வாழ்க்கையும் அதில் படிந்திருக்கும் ரத்தக் கறையுடனான உண்மைகளும்தான். லத்தீன் அமெரிக்க புரட்சியில் க்யூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவின் தலைமையை உருவாக்க உருதுணையாக சே ஏந்திய துப்பாக்கியின் தோட்டாக்கள் புரட்சியின் வடிவமாக அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.



எர்னெஸ்டோ 'சே' குவேரா - மனிதர்களை பெரும் துயர்களிலிருந்து விடுவிக்க ஆசைப்பட்ட ஒரு மனிதன் – அவனது வாழ்க்கை – அவனது தேடல் – அவனின் பயணம் இதுவே வால்டர் சாலஸ் இயக்கியிருக்கும் the Motorcycle Diaries' திரைக்கதையின் ஒற்றைவரி. உலகின் முதன்மையான புரட்சியாளரின் ஆரம்பக் கட்ட நாள்களின் தொகுப்பே இத்திரைப்படம். உண்மையே புனைவாக்கம் செய்யப்பட்டு நிழலாக மட்டுமல்லாமல் திரையின் நிஜமாக காலத்தின் கரங்களில் ஆழமான பதிவு செய்யப்பட்டிருக்கும் திரைக்காவியம் இது எனலாம்.


1951 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பிலிருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்ட எர்னஸ்டோ குவேரா (ப்யூசர் எனும் செல்லப் பெயர் உண்டு) பயோ கெமிஸ்டான தன் நண்பன் ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு (ப்யூசரை விட நான்கைந்து வயது மூத்தவன்) புதிய நாடுகளை, வெவ்வேறு ஊர்களை, அதன் மனிதர்களை, குறிப்பாக பெண்களை பார்த்து பழக ஆசைப்பட்டு தங்களது அதர பழசான ஆனால் நல்ல நிலையில் ஓடக்கூடிய மோட்டார் சைக்கிளில் (அதன் பெயர் மைட்டி ஒன்) லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே நீண்ட நெடிய பயணத்தை துவக்குகிறார்கள். நண்பனின் பொறுப்பில் எர்னஸ்டோவை ஒப்படைத்த அவனின் குடும்பம் புன்னகையுடனும் கொஞ்சம் கண்ணீருடனும் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்புகிறது.

துள்ளலுடன் துவங்கிய அவர்களின் அதி உற்சாகப் பயணம் மலைப்பாதைகளையும் ஆற்றோடைகளையும் நீண்ட புறவழிச் சாலைகளிலும் தங்கு தடையின்றி வழுக்கியோடியது. மைட்டி ஒன்னும் மின்னலெனவே அவர்களுக்காய் பறந்தது. இளமையின் உச்சத்திலும் சாகச மனோபாவத்திலும் திளைத்துக் கிடக்கும் அவ்விருவரும் பெரும் மனஉத்வேகத்துடன் தங்களது பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஓரிரு முறை அவர்கள் வண்டி மணற்பாதையில் சறுக்கி விழுந்தாலும் கலங்காமல் சரி செய்து பயணத்தை தொடர்கிறார்கள்.

தோழர்கள் இருவரும் தேர்ந்தெடுத்திருந்த வழி அபாயகரமானது மிகவும் கடினமானது. ஆனால் ஒரு போதும் அடைய முடியாதது அன்று. வடக்கு திசையில் ஆண்டெஸ் மலையை தாண்டி, சிலியின் கரைகளில் பயணித்து, அடகாமா பாலைவனத்தை கடந்து பெருவிற்குள் நுழைந்து இறுதியில் வெனின்சுலாவை அடைய வேண்டும், ஆல்பர்டோவின் சபதம் ஏப்ரல் இரண்டாம் தேதிக்குள் தனது முப்பதாவது வயது தொடக்கத்தில், தோழன் எர்னஸ்டோவுடன் அங்கு சென்று சேர்வதுதான். ஆனால் அவர்களின் அருமை நண்பன் மைட்டி ஒன் அடிக்கடி ரிப்பேர் ஆனதால் அவர்களின் பயணம் தடைப்பட்டு தடைப்பட்டு ஜூலை மாதம்தான் சென்றடைகிறார்கள். இடைப்பட்ட காலகட்டங்களில் அவர்களின் அனுபவங்களே எர்னஸ்டோவின் மொழியில் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களின் அவனது டைரிக் குறிப்புக்களாக பதிவாகிறது. இந்தப் பயணம்தான் ப்யூசர் புரட்சியாளராக மாறியதற்கான முதல் விதையை போட்டது பயணத்தின் ஆரம்பத்தில் எர்னஸ்டோ தன்னுடைய தோழி சின்சினாவை சந்திக்க விரும்பி அவளின் ஊருக்குச் செல்கிறான். சூதாட்டம், ஆட்டம் பாட்டத்திற்கு பிறகு அவர்கள் சிறுது நேரம் பேசுகிறார்கள். வெகு நாள் கழித்து அவனை சந்தித்த அவள் அவனுடைய பயணத்தை வாழ்த்தி முத்தமிட்டு பலமுத்தமிட்டு கொஞ்சி அதன் பின் அடுத்த நாள் அவன் கிளம்பும் தருவாயில் கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களை அவனிடம் தந்து எக்காரணத்தை கொண்டும் செலவு செய்துவிடக்கூடாதென்ற அன்பான பந்தனையுடன் அவனுக்கு அளிக்கிறாள். புன்னகையுடன் விடைபெற்று பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்கள். பல சோதனைகள் வரும்போதெலாம் அப்பணத்தை ஆல்பர்டோ கேட்கிறான், எவ்வளவு கெஞ்சியும் தர மறுக்கிறான் எர்னெஸ்டோ. ஒரு கட்டத்தில் தீவிர ஆஸ்மாவால் பாதிக்கப்பட்ட தன்னை காப்பாற்றிக்கொள்ளக் கூட அவன் அப்பணத்தை பயன்படுத்தவில்லை. மன உறுதியும் நேர்மையும் ஒருங்கே உள்ள் குணம் கொண்டவனாய் நம்முன் எர்னெஸ்டோ காட்சிப்படுத்தப்படுகிறான்.


ஆரம்பத்தில் கோலகலமாக தொடங்கிய அவர்களின் பயணம் பல அலைக்கழிப்புக்களுக்கு உள்ளாகிறது. தென் அமெரிக்காவின் பரந்த நிலப்பரப்புக் காட்சிகள் பார்க்க சலிக்காதவை. தெள்ளந்தெளிவான வானம், மிதந்து செல்லும் மேகம் அதன் கீழே மலையின் ஹேர்பின் வளைவுகளிலும், நீண்ட ஒற்றையடிப் பாதைகளிலும், யாருமற்ற பனிக் காடுகளிலும், மூடுபனி மலைச்சாலைகளில் கடுமையான பனி மழையின் நடுக்கத்திலும் சோர்வடையாத மனதுடன் அவர்கள் வெற்றி வீரர்களாக பயணம் செய்கிறார்கள். கொடுமை என்னவெனில் எர்னெஸ்டோ வாழ்நாள் முழுவதும் கடுமையான ஆஸ்மாவினால் பாதிக்கப்பட்டவன். அவனுக்கு வீசிங் வந்துவிட்டால் தாங்கமுடியாத மூச்சிரைப்பால் மிகவும் சிரமப்படுவான். ஒரு குழந்தையைப் போல அவனைத் தாங்கும் நண்பனான ஆல்பர்ட்டோ உடனே டெக்காட்ரானை அவனுக்கு எவ்வாறோ கிடைக்கச் செய்து அவன் சுவாசத்தை அவனுக்கு மீட்டுத் தருவான். எத்தகைய நோய்மையினாலும் உடல் சோர்வினாலும் அவர்களின் பயணம் நிற்கவில்லை. மாறாக இன்னும் தீவிரத்துடன் தொடர்ந்தது.

எர்னெஸ்டோ அடிக்கடி தன் டைரியை எடுத்து அன்று தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை அழகான குறிப்புக்களாக எழுதிக்கொண்டிருப்பான். ஒரு மலைப்பாதையில் சுரங்கத்தில் வேலை செய்வதற்காக கட்டாயப்படுத்தப்படும் தம்பதியினரை சந்திக்கிறான். ஏன் அவர்கள் கட்டாயத்துக்குட்படுத்தப்படுகிறார்கள் என்ற கேள்வி அவன் மனதில் எழுகிறது. கேட்பதற்கு யாருமில்லை எனவே தன் டைரியில் பதிவு செய்கிறான், தன் இதயத்தின் அடி ஆழத்திலும் கூட...

இப்படி வெவ்வேறு மனிதர்களின் பலவகைப்பட்ட துன்பங்களையும் அல்லல்களையும் நேரிடையாக பார்த்த எர்னெஸ்டோவின் மனம் கலங்குகிறது. என்ன வாழ்க்கை எங்கே இது நம்மை இட்டுச் செல்கிறது வாழ்வின் ஆரம்பம் என்ன முடிவு என்ன போன்ற பெரும் கேள்விகள் அவன் இளம் மனதை ஆட்டிப்படைக்கிறது. வறுமை, பசி, பிணி என்று வாழ்க்கை மரணத்தின் வெவ்வேறு உருக்களாய் எங்கும் படிந்து கிடப்பதை மனித நேயக் கண்ணோடு பார்க்கிறான். ஒரு இடத்தில் மருத்துவ வசதியற்ற முதிய பெண்மணிக்கு மனம் முழுக்க தீரா வலியுடன் அவளைப் பிழைக்க வைக்க முடியாதெனத் தெரிந்தும் வைத்தியம் செய்கிறான். வலியாவது குறையும் என்பதே அவன் நோக்கம்.. அவளுக்கான பிரார்த்தனையாய் அன்றைய டைரியின் பக்கங்கள் அவனின் கண்ணீரால் நனைகிறது.

எர்னெஸ்டோவைப் பற்றி குறிப்பிட வேண்டிய பெரும்குணங்களில் ஒன்று அவன் மிகவும் நேர்மையானவன். உண்மையை அதன் ஒளியுடன் மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவன். ஆல்பர்ட்டோவோ அவ்வப்போது புளுகு மூட்டைகளை அள்ளி விடுபவன். இருவருக்கும் இதனால் அவ்வப்போது நடக்கும் சிறு சிறு சண்டைகளின் இறுதியில் வெல்பவன் எர்னெஸ்டோதான். தங்களுக்கு மிகவும் உதவிய டாக்டர் ஒருவர் எழுதிய புதினம் வாசிக்கக் கிடைத்தபோது மிகவும் நேர்மையுடன் அது எழுத்தே அல்ல என்பதை விமர்சிக்கிறான் எர்னெஸ்டோ...அவனை எரித்துவிடும்படியாக பார்த்த ஆல்பர்ட்டோவைத் தவிர்த்து...நல்ல வேளையாக அந்த நேர்மையான விமர்சனத்தை ஏற்கும் மனப்பக்குவம் அந்த டாக்டருக்கு இருந்தது. அவர் தான் இவர்களை பெருவிற்கு வழிநடத்திச் சென்றவர்.

பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் நடந்த நிகழ்ச்சியொன்று தான் அவர்களின் இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. அங்கிருந்த தொழுநோயாளிகள் ஆஸ்பத்திரியில் சில வாரங்கள் தொண்டு செய்தது வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. தொழுநோயாளிகள் என்பவர்கள் எப்படி சமூகத்தினரால் புறக்கணிக்க்பட்டு சரியான மருத்துவ வசதிகள் இன்றி வீதிகளில் கைவிடப்பட்ட மனிதர்களாய் இன்றும் நாம் காண்கிறோம். மனித் நேயமும் தாயன்பும் கொண்ட எர்னெஸ்டோ தொழுநோயாளிகளிடம் எவ்வித அறுவறுப்பும் இல்லாமல் க்ளவுஸ் என்ற உறையைக் கூட அணியாமல் அவர்களுக்கு எவ்வகையிலும் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவர்களோடு கலந்து பழகி மருத்துவம் செய்கிறான்.

சிறுகச் சிறுக அவர்களின் அன்பையும் நம்பிக்கையும் பெற்று தீர்க்க முடியாத வியாதிகளின் தீவிரத்தன்மையை குறைத்து, சிலருக்கு அறுவை சிகிச்சைகள் செய்து, மனம் உடைந்து போயிருக்கும் நோயாளிகளுக்கு ஆறுதல் மட்டுமே தந்து கொண்டிருக்காமல் அவர்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்தி தானும் அவர்களுடன் விளையாடி, ஆடிப் பாடி அவர்களுக்கென்று ஒரு உலகத்தை உருவாக்கித் தருகிறான். அவனின் உள் அன்பினாலும் நிபந்தனையற்ற பிரியத்தாலும் அந்நோயாளிகள் அவனை நடமாடும் தெய்வமாகவே பார்க்கிறார்கள். ஆனால் எர்னெஸ்டோவிற்கு புகழ்ச்சியோ வழிபடல்களோ ஒருபோதும் பிடிப்பதில்லை. கருணை மனம் கொண்ட அவன் விரும்புவதெல்லாம் வலியினின்றும் வேதனையினின்றும் மனிதர்களைக் காப்பாற்ற உருவாக்கப் படவேண்டிய ஒரு சக்தி. அல்லது கருவி .அது எதுவாக இருக்கும் என்பதை தீவிரமாக யோசித்திக் கொண்டிருந்தான்.

தொழுந்நோயாளிகாளின் காப்பகத்திலிருந்து கிளம்பக்கூடிய நாள் நெருங்கியது. அனைவரும் தங்கள் கண்ணீரை மறைத்து இவர்க்ளுக்கு ப்ரியாவிடை தருகிறார்கள். எர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் கனத்த மனத்துடன் புறப்பட்ட புள்ளிக்கு மீண்டும் திரும்புகிறார்கள். இப்போது அவர்கள் வாழ்வின் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு கட்டாய நிலையில் இருக்கிறார்கள். ஆல்பர்ட்டோ ப்ராக்டிகல் வாழ்க்கையில் ஊறியிருப்பவன், அவன் செல்லும் திசை எல்லாரும் செல்லக்கூடியதுதான். ஒவ்வொரு மனிதனும் காலம் காலமாக செய்து கொண்டிருப்பதுதான் அது மிகச் சாதாரண வழியேதானாலும் நம்மைப் போல அவனுக்கும் வேறு வழியில்லை – அவ்வழியிலேயே செல்லத் தலைப்படுகிறான். புறப்படும்முன் எர்னெஸ்டோவிடம் ஒரு உண்மையை சொல்லிவிட்டுச் செல்கிறான். தன்னுடைய பிறந்த தேதி ஏப்ரல் இரண்டு அல்ல...ஒரு இலக்கை நிர்ணயித்து பயணித்தால் பயணம் வேகமாகும் என்பதற்காகவே அவ்வாறு பொய் கூறினேன் என்று சொல்லிய போது புன்னகையுடன் எர்னெஸ்டோ அது தனக்கு தெரியும் என்கிறான். மென்சோகத்துடன் எர்னெஸ்டோவிடம் கைகுலுக்கி விடைபெறுகிறான் ஆல்பர்ட்டோ.




ஆனால் எர்னெஸ்டோ சே குவேரா தேர்ந்தெடுத்த பாதை யாரும் செல்ல அஞ்சுவது. மிகவும் நேசிக்கும் மனிதர்களின் துயர் துடைக்க ஆயுதம் எடுத்து தோட்டாக்களின் இடைவெளிகளில் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளக் கூடிய அபாயகரமான புரட்சிக்கானது. மிக மெல்லிய மனதும் அதே சமயம் எஃகு போல் உறுதியான் நெஞ்சுரமும் கொண்ட சே தேர்தெடுத்த பாதை போராட்டக் களமானது.

உலகில் இரண்டே விதமான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். முதல் வகையினர் ஆல்பர்ட்டோ போன்றவர்கள். இவர்களே பெரும்பான்மையினர். ஆயிரத்தில், கோடியில் ஒருவர் தான் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள், பிற உயிர்க்காக தன்னுயிரை விடுபவர்கள். என்றும் எல்லா காலங்களிலும் எல்லார் மனதிலும் வாழும் சே போன்றவர்களே அம்மாமனிதர்கள்...அவர்களின் ரத்தம் பருகித்தான் இந்த நிலம் ஈரப்பதத்துடன் இருக்கிறது. அதில் நின்று கொண்டிருப்பது நாமும்தான்...

இப்படத்தின் தாக்கம் என்பது சில நாள்கள் மட்டுமன்று ஒரு வாழ்நாளுக்கானது...


சேவின் டைரிக் குறிப்பிலிருந்து சில துளிகள்:


"என்னுடைய கனவு காணும் மனதை நிறைவு செய்ய இயலாதவனாய் நான் அமைதி இழந்தவனாகிறேன். மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகள், தேர்வுகள் ஆகியவை எனக்கு சலிப்பை ஏற்படுத்தின.

மனம் போன போக்கில் அமெர்க்க கண்டம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட எங்கள் பயணம் நான் உணர்ந்ததை விட அதிகமாகவே என்னை மாற்றிவிட்டது.

எங்கள் மனங்களிலு கைகளிலும் விடியலின் விதைகள் நிரம்பியிருக்கின்றன. இந்த நாட்டில் அவற்றை விதைக்கவும் அவை பலன் தரும் வரை காத்திருக்கவும் நாங்கள் தயாரவே உள்ளோம்.

மிருக பலத்திற்கும் அநியாயத்திற்கும் எதிரான இறுதி வெற்றி மக்களுடையதாகவே இருக்கும்.

மக்கள் என்னை 'சே' என்று அழைப்பதை நான் மிகவ்ம் விரும்புகிறேன்.

பலர் என்னை ஒரு வீரசாகசச் செயல்களில் நாட்டமுள்ளவன் எனக் கூறலாம். நான் அத்தகையவந்தான். ஆனால் கொஞ்சம் வேறுபட்டவன், என்னுடைய கொள்கைக்காகவும் நம்பிக்கைக்காகவும் உயிரையும் தருபவர்களில் நானும் ஒருவன்."

சில பின் குறிப்புகள் :

"சே" என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்

க்யூபா, பொலிவியா, காங்கோ இன்னும் அடக்குமுறை எந்தெந்த இடங்களில் கொடிகட்டிப் பறந்ததோ ஏகாதிக்பத்யம் தன் கொடுங்கரங்களை மக்கள் மீதி பதித்திருந்ததோ அங்கே ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் சேயை ஈடுபடச் செய்தது. அவரின் மனித நேயம் பரந்துபட்டது, எல்லைக்ளுக்கு உட்பட்டதில்லை. எல்லை என்பது நிலங்களில்தான் மனங்களில் இல்லை என்பதை தன் வாழ்நாள் முழுவதும் நிரூபித்தவர் சே.

படத்தில் சே குவேராவாக நடித்திருந்த கேல் கார்சியா பெர்னல் (Gael García Bernal) தன் அருமையான நடிப்பாலும் வசீகரத்தாலும் பார்வையாளர்களை கட்டிப் போட்டுவிடுகிறார். ஆல்பர்டோவாக நடித்தவர் ரோட்ரிகோ.

பயணத்தின் போது எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் முதலில் புத்தகம் ஒன்றைத்தான் எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளையும் பெற்றது.

சே குவேரா க்யூபாவின் அதிபரான ஃபிடல் காஸ்ரோவிற்கு நெருங்கிய நண்பர். சே குவேரா ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் பிற போராளிகளும் தங்கள் உயிரைப் பயணம் வைத்து க்யூபப் போராட்டத்தில் வெற்றியடைந்தனர்.
சே குவேரா – சில குறிப்புகள்

• பிறப்பு – 1929 ஜூன் மாதம் 14ம் தேதி.

• 1945 – மருத்துவ மேற்படிப்பு

• 1950 – மோட்டார்சைக்கிளில் 3000 மைல் தூரம் அர்ஜெண்டைனா முழுவதும் சுற்றுப்பயணம் ஆரம்பம்

• 1952 – தனது ப்ரியமான நண்பன் ஆல்பர்டோ கிரனட்டொவுடன் பெரு, கொலம்பியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு கடும் பயணம் செய்தார். தொழுநோயாளிகள் குடியிருப்பில் சேவை செய்து அங்கு பணிபுரிந்தார்.

• 1953 ஜூன் 12 – மருத்துவர் பட்டம் பெற்றார்

• 1953 ஜூலை 6, லத்தீன் அமெரிக்க பயணத்தை தொடங்குகிறார்.

• பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தால் சே கைது செய்யப்பட்டு பொலிவிய ராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னும் இடத்தில் அக்டோபர் 9ம் தேதி 1967 ஆண்டு சே கொல்லப்பட்டார்.

1 comment:

Unknown said...

எங்கே அநீதியை கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடித்தெழுகிறதா?? அப்படியானால் நீயும் என் நண்பன் தான் - சே குவேரா
வாழ்க 'சே' புகழ் ...!

Post a Comment