Wednesday, May 25, 2011

மூலதன சர்வாதிகாரத்தை எதிர்த்து, ஸ்பெயின் மக்கள் எழுச்சி

மே 15 , ஞாயிற்றுக் கிழமை, ஸ்பெயின் நாட்டில் மக்கள் எழுச்சி இடம்பெற்றுள்ளது. பெரியதும், சிறியதுமான ஐம்பதுக்கும் அதிகமான நகரங்களில், பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். "எமக்குத் தேவை நிஜமான ஜனநாயகம்", "நாங்கள், அரசியல்வாதிகளினதும், வங்கியாளர்களினதும் வியாபாரப் பண்டங்கள் அல்ல." என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன. தற்போது இந்த மக்கள் எழுச்சி நிரந்தர வடிவம் பெற்று வருகின்றது. எகிப்து, கெய்ரோ தஹீர் சதுக்கத்தில் நடனத்தைப் போல, ஸ்பானிய நகர சதுக்கங்களில் கூடாரங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன.
துனிசியாவில், எகிப்தில் நடந்த அதே பாணியில், ஸ்பானிய மக்கள் போராட்டமும் ஒழுங்கமைக்கப் பட்டது. "Democracia Real Ya" என்ற அமைப்பு, முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை அணிதிரட்டியது. பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த அரச செலவினைக் குறைப்புகளை ஆர்ப்பாட்டக் காரர்கள் எதிர்த்துப் போராடுகின்றனர். போராட்ட இயக்கம், அனைத்து பாராளுமன்ற அரசியல் கட்சிகளையும் நிராகரிக்கின்றது. "மக்கள் ஜனநாயகம்" மலர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. ஸ்பெயின் ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை சந்தித்த நாடென்பதால், ஏற்பாட்டாளர்கள் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்ட செலவுகளை சில மர்மமான நிறுவனங்கள் கொடுக்கின்றனவா? போலிஸ் அடக்குமுறையினால், பலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டம் தொடருமா? கைது செய்யப்பட்ட நபர்களை, "இயக்கம்" கைவிட்டு விடுமா?

மாட்ரிட் நகரைத் தவிர, பிற இடங்களில் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றது. மாட்ரிட் நகரில், கலகத் தடுப்பு போலிஸ் ஆர்ப்பாட்டக் காரரை அகற்றுவதற்கு பெரு முயற்சி எடுத்தது. சிலர் கைது செய்யப்பட்டனர். மே 17 அன்று, கைதானவர்கள் பிணையில் விடுவிக்கப் பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக போலிஸ் தலைமையாக வாசலில் குழுமியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மே 17, வெள்ளிக்கிழமை, கல்வி தனியார் கைகளில் வணிக மயப்படுவதை எதிர்த்து, மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நகரங்களில் வருமானம் குறைந்தோருக்கு ஏற்ற வாடகை வீடு கிடைப்பது அரிதாகி வருகின்றது. வீட்டுப் பிரச்சினை குறித்தும், ஆர்ப்பாட்டக்காரர்கள் கவனம் செலுத்தினார்கள். வங்கிகளுக்கு முன்னால், சிறு சிறு குழுக்களாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிதி நெருக்கடிக்கு காரணமான வங்கியாளர்கள், நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும், என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது.

No comments:

Post a Comment