Friday, February 11, 2011

திருப்பி அடிப்பேன்!: சீமான் பாகம் 17

எங்கள் அடுத்த தலைமுறைக்குள் 'நஞ்சணிந்த வீரர்’ நாடமைப்பர் வெஞ்சமரை வென்று வீதியெங்கும் முரசறைவர் வேலியன்று போட்டு வெறிநாய்கள் உட்புகுந்து காலில் கடிக்காமல் காவலுக்கு நின்றிருப்பர்.

எங்கள் அடுத்த தலைமுறைக்குள்
'நஞ்சணிந்த வீரர்’ நாடமைப்பர்
வெஞ்சமரை வென்று
வீதியெங்கும் முரசறைவர்
வேலியன்று போட்டு
வெறிநாய்கள் உட்புகுந்து
காலில் கடிக்காமல்
காவலுக்கு நின்றிருப்பர்.
பூமரங்கள்
பூத்துச் சொரியும்
'புலம்பெயர்ந்த குருவி’யெல்லாம்
கூடு திரும்பும்
கோயிலெல்லாம் கொடியேறும்
நாடு திரும்பி நம் கையில் வந்த​தென்று
பாடும் குரலெல்லாம் பரவும்!

- கனவும் களமுமாகப் போராடிய நம் சொந்தங்கள் வல்லாதிக்கப் போரில் வீழ்த்தப்பட்டுவிட்டன. பயங்கரவாதிகளை வென்றுவிட்ட​தாகப் பகபகக்கிறது சிங்களக் கூட்​டம். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவித்து​விட்ட​தாக மார் தட்டுகிறது மன​சாட்சி வேஷம்பூண்ட உலகம்.

மண் சாட்சி​யாய்ப் போராடிய மறவர்களின் தீரம், சொந்த இனத்துக்கே சரியெனத் தோன்றாமல் போனதுதான் துயரத்தில் துயரம். 'பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி’, 'அரசியல் ரீதியாகப் போராடி இருந்தால், அதிகாரப் பகிர்வைப் பெற்றிருக்கலாம்’,

'பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறார் பிரபாகரன்’, 'ஈழத்தைவைத்து தமிழகத்தில் அரசியல் நடத்துகிறார்கள்...’ என ஆதரித்து அரவணைத்து இருக்கவேண்டிய இந்த அன்னை மண் அவலாக மென்று துப்பிய விமர்சனங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. 'ஈழத்தைப்பற்றிப் பேசுவதுதான் சீமானுக்கு வேலை...’ என விமர்சிக்கும் அறிவார்ந்த பெரு​மக்களே... அதைப்பற்றிப் பேசாமல் வேறு எதைப்பற்றிப் பேசுவது? 'சாகும் வரை சாப்பாடு போதும்’ என ஓதும் வேலையை இந்தச் சீமா​னால் செய்ய முடியாது. 12 மைல் தூரத்தில் நடந்த அத்​தனை படுகொலை​களையும் பார்த்துக்​கொண்டு, மூன்று வேளைகளும் மூக்குமுட்ட உண்டுகொண்டு இருந்தோமே... அதைவிடக் கொடூரமானது அந்த மறவர்களை நாம் விமர்சிப்பது!

ஈழ விடுதலை எமது விடுதலை. அது, உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனுக்குமான தாயகம். எனது பாட்டன் அருண்மொழித் தேவனும் அவனை அடுத்து வந்த சோழர்​களும் ஏந்திய புலிக் கொடி எமக்கான தேசியக் கொடியாக மாறுகிற மகத்தான வாய்ப்பு. தமிழர் பணம்... தமிழ்த் தேசிய ராணுவம்... தமிழ்த் தேசிய கீதம் என்றெல்லாம் நமக்கான அங்கீ​காரத்தைப் பெறப் புலியாய்ப் போராடியவர்களைப் பழிதூற்றி​யது மட்டும்தானே நம்முடைய இனமானப் பங்களிப்பு?!

ஈழப் போர் உக்கிரமாக நடந்த வேளையில், அதனைத் தடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் தமிழ்த் திரைத் துறையினர் போராடினார்கள். அதில் கலந்துகொண்டு மனதில் கொந்தளித்த கருத்துகளை எல்லாம் கொட்டினேன். சூரியத் தொலைக்காட்சியில் அது நேரலையாக ஒளிபரப்பானது. 'இறையாண்மையைக் குலைக்கும் பேச்சு.

அதனால், உங்கள் மீது தமிழக அரசு வழக்குப் போடக்கூடும்!’ என என் பேச்சின் அர்த்தங்​களுக்கு அறுவை சிகிச்சை நடத்திக்கொண்டு இருந்தார்​கள் சிலர். அதற்கிடையே என் அலைபேசிக்கு பலரிடம் இருந்தும் அழைப்பு. 'ஈழப் போராட்டம் ஏன் நடக்கிறது என்பதே உங்களுடைய பேச்சைக் கேட்ட பின்னர்தான் புரிந்தது. நாம் நிச்சயம் போராடுவோம்!’ என்றனர் சிலர்.

நான் சுக்குச்சுக்காக நொறுங்கிப்போன தருணம் அது தமிழர்களே... 12 மைல் தூரத்தில் நடக்கும் 60 ஆண்டு கால சுதந்திரப் போராட்டம் என்னுடைய 20 நிமிடப் பேச்சில்தான் புரிந்தது என்றால், தன் வரலாறு தெரியாத தறுதலை​களின் கூட்டமாகத்தானே தமிழகம் இருந்திருக்கிறது. 'வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது’ என்றார் லெனின்.

வரலாறு தெரியாத எந்த இனமும் வரலாறு படைக்க முடியாது. ஈழப் போராட்டம் ஏன் தொடங்கியது என்பதே புரியாமல், 'அது தவறு... இது சரி’ எனத் தர்க்கம் பாடுவது தமிழர்களாகிய நமக்கு வழக்கமாகி​விட்டது.

'நாங்கள் அனுசரித்து வாழ்ந்துகொள்கிறோம்’ எனத் தமிழன் காட்டிய பெருந்தன்மையே பெரும் பிழையாகிவிட்டது. மதத் தீவிரவாத நாடாக மருவிய இலங்கை அரசு, தமிழரோ, தமிழ் இஸ்லாமியரோ ஒருபோதும் அதிபராக முடியாது என்கிற சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது.

இலங்கையின் இராணுவத்தில் ஒரு தமிழனுக்கும் இடம் இல்லை என மறுக்கப்பட்டது. 40 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்கிற நிலை தமிழ் மாணவர்களுக்கு மட்டும் 80 சதவிகிதமாகக் கட்டாயமாக்கப்பட்டது. அப்படியும் தமிழ் மாணவர்கள் கல்வியில் சாதிக்க... அதற்குப் பெரும் காரணமாக இருந்த அறிவுக் கருவூலம் யாழ் பல்கலைக்கழகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அவற்றை எல்லாம் எதிர்த்து தந்தை செல்வா காலத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் எழ... சிங்கள மூர்க்கம் தமிழர்களைத் துவம்சம் செய்யத் தொடங்கியது.

கொதிக்கக் காய்ச்சிய தாரில் தமிழ்க் குழந்தைகளைத் தூக்கிப்போட்டுக் கொன்றது, தமிழச்சிகளின் மார்புகளை அறுத்து சணலில் கோத்து, 'இங்கே மார்புக் கறி கிடைக்கும்’ என எழுதி விற்பனைக்கு வைத்தது, தமிழர்களின் தொடைகளைப் பிளந்து தெருவில் சிதறடித்தது, தமிழ்ப் பெண்களின் மார்புகளில் கொதிக்கக் காய்ச்சிய தாரால் ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்தைப் பதித்தது என சிங்கள வெறியாட்டங்கள் தமிழர்களை உறையவைத்தன.

அத்தகைய சூழலில்​தான் எந்த ஆயுதத்தைக் காட்டி அவர்கள் அச்சுறுத்தினார்களோ... அதே ஆயுதத்தால் தன் இனத்தைப் பாதுகாக்க தலைவர் பிரபாகரன் தயாரானார். தந்தை செல்வா காலத்​திலேயே தமிழர்களின் போராட்ட நியாயத்தை உலகம் புரிந்துகொண்டு இருந்தால்... பிரபாகரனே உருவாகி இருக்க மாட்டார்.

ஜெயவர்த்தனே மட்டும் சரியான பௌத்தனாக இருந்திருந்தால், நான் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காது!’ - தலைவர் பிரபாகரனே சொன்ன வார்த்தைகள் இவை.

'நாட்டுக்காக உயிரைவிடுவது உத்தமம்தான்... ஆனால், உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமே...’ என்பதுதானே புலிகளின் ஆதங்கம். உடனே, 'அது பிரிவினைவாதம்’ எனப் பிளிறுகிறார்களே... ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரிவினைவாதம் என்றால், உலகில் இத்தனை நாடுகள் உதித்தது எப்படி?

நோர்வேயில் இருந்து சுவீடனும், சேர்பியாவில் இருந்து கொசாவோவும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானும், பாகிஸ்தானில் இருந்து வங்க தேசமும் பிரிந்தது எல்லாமே பிரிவினைவாதமா

உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து பேரன் பேத்தி எடுத்த என் தேசம், தனி ஈழக் கோரிக்கைக்கு மட்டும் தடையாக நிற்பது ஏன்? ஈழ நாட்டை நாம் அடைய நடக்கும் போராட்டம் அல்ல இது... என் எதிரிகள் ஈழத்தை அடைந்து​விடக் கூடாது என்பதற்காக நடக்கும் போராட்டம்! தாயின் மடி தமிழ் ஈழம்... அதில் வேறு ஒருவன் தலை வைப்​பதைத் தடுப்பதற்காகவே அண்ணன் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். அவரைப் பயங்கரவாதியாக இட்டுக்கட்டும் வல்லூறு தேசங்கள், தனிப்பட்ட வாழ்​வியலில் தவறு என ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அவர் மீது சொல்ல முடியுமா? கண்ணியத்தில் - பெண்ணியத்தில் - களமாடிய புண்ணியத்தில் அந்தத் தகையாளனை விஞ்சக்கூடிய வீரத் தலைவர்கள் எவரேனும் இந்த உலகில் உண்டா?

அவர் கண்களைப் பார்த்த - கணீர் மொழி கேட்ட பெருவரத்தானாகச் சொல்கிறேன்... எத்தகைய இக்கட்டுகள் சூழ்ந்தாலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததற்குக் காரணமே... தாய்த் தமிழ் உறவுகளின் தேசமாக இந்தியா இருப்பதால்தான்!

ஆனால், சிங்கள அரசுடன் நடந்த போரை உலக நாடு​களுக்கு எதிரான போராக மாற்றியதே இந்தியாதான். 'ரணில் விக்கிரமசிங்கேயை ஆதரித்து இருந்தால், ஈழப் போரே நடந்திருக்காது’ என இன்று வரை அனுமானம் சொல்பவர்களுக்குச் சொல்கிறேன்... ரணில் இல்லை; ராஜபக்ஷே இல்லை... சிங்கள அதிபராக ஒரு தெரு நாய் தேர்வாகி இருந்தால்கூட நிச்சயம் ஈழத்தை அழிக்கும் போர் அரங்கேற்றப்பட்டு இருக்கும். காரணம்... ஈழப் போரை நடத்தியதே இந்தியாதான்.

'இந்தியாவின் அறிவுரைப்படியே புலிகளைத் தோற்​கடித்தோம்’ என இலங்கை அதிபர் ராஜபக்ஷே நன்றி பாராட்டினாரே... இன்று வரை இந்தியத் தரப்பில் இருந்து அதற்கு மறுப்பு உண்டா? 'ஜெயவர்த்தனே 30 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த பிழையை நாங்கள் செய்ய​வில்லை. அதனால்தான், போரில் வெற்றி பெற்றோம். ஜெயவர்த்தனே செய்த பிழை, இந்தியாவை நம்பாதது!’ என கோத்தபய ராஜபக்ஷே கொக்கரித்துச் சிரித்தானே... 'எங்களுக்கு என்ன தெரியும்?’ எனக் கையை விரித்த இந்த தேசம், அந்தக் கருத்தை மறுத்ததா?

தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்தி வீழ்த்தியவர்கள் அவருடைய குடிமக்க​ளுக்கு ஏற்படுத்திய விடிவு என்ன? சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை சோற்றுக்குக் கையேந்த வைத்ததும்... அதிகாரப் பகிர்வு கேட்டவர்களை அம்மணமாக நிற்கவைத்ததும்தானே!

பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இல்லாத தேசமாக - எல்லாவித சுதந்திரங்களோடும் தன் மக்களை அரணாகக் காத்த அண்ணன் பிரபாகரன் பயங்கரவாதி என்றால், முள்வேலிக்குள் அந்த மக்களை முடக்கிப் போட்டவர்கள்தான் ஜனநாயகவாதிகளா?

அவலக் காட்சியாகவும் அவமானச் சாட்சியாகவும் எம் மக்களை நிறுத்தியதைத் தவிர, தலைவர் பிரபாகரனை வீழ்த்தியதால் விளைந்த மாற்றம்தான் என்ன?

'பண்பாடு பழக்க வழக்கங்களால் வேறு​பட்டு இருக்கும் எங்களை கனடாவில் இருந்து பிரித்துவிடுங்கள்’ எனக் கோரிக்கை வைத்தது க்யூபெக். உடனே, கனடா ஜனநாயக அடிப்படையில் அங்கே வாக்கெடுப்பு நடத்தியது. இரு முறை நடந்த வாக்கெடுப்பிலும் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகவில்லை.

உலகக் கட்டப்பஞ்சாயத்துக்காரர்களாக அசுரம் காட்டும் நாடுகள் அத்தகைய வாக்கெடுப்பை இலங்கையில் நடத்த வேண்டியதுதானே? 'ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ்கிறீர்களா? இல்லை, தனித் தமிழ் ஈழமாக மீள்கிறீர்களா?’ என்கிற கேள்வியை முன்வைக்க ஜனநாயக சக்திகள் தயாராக இருக்கின்றனவா?

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்குக் காரணம்... மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்குக் காரணம்... மொழி. மதம், இனம், மொழி, பண்பாடு, மரபு என அத்தனையிலும் வேறுபட்டு நிற்கும் ஈழத்தை மட்டும் இலங்கைக்குள் இறுக்குவது எந்த விதத்தில் நியாயம்?

நான் ஈழத்துக்குப் பயணமானபோது, சிங்கள ஓட்டுநர் ஒருவர் அங்கு உள்ளவற்றை விளக்கிச் சொன்னபடி வந்தார். 'இது எங்களின் கோயில்’ என ஓர் இடத்தைக் காட்டினார். 'அங்கே என்ன இருக்கிறது?’ எனக் கேட்​டேன். 'புத்தரின் பல் இருக்கிறது!’ எனச் சொன்னார். புத்தரின் பல்லைப் பத்திரப்படுத்தியவர்கள், அவருடைய சொல்லைப் பத்திரப்படுத்தவில்லையே!

ஆசையை வெறுக்கச் சொன்ன புத்தனின் வார்த்தை​களை அடியற்றி இருந்தால், எத்தனின் தேசமாக இலங்கை இன்று மாறி இருக்காது.

'வெற்றி... வெற்றி...’ எனக் கொக்கரித்த ராஜபக்ஷே, இன்று 'புற்று... புற்று...’ என அலறியபடி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு ஓடு​கிறார். புற்று வருகிறதோ இல்லையோ... புலித் தலைவர் உத்தரவில் உம்மை வீழ்த்த சீக்கிரமே 'பொட்டு’ வரும்!


பாகம் 16
பாகம் 15
பாகம் 14
பாகம் 13
பாகம் 12
பாகம் 11
பாகம் 10
பாகம் 9
பாகம் 8
பாகம் 7
பாகம் 6
பாகம் 5
பாகம் 4
பாகம் 3
பாகம் 2
பாகம் 1

No comments:

Post a Comment